பெண்ணுடலும் மாதவிடாயும்

By - Chandra Nalliah 

இருபத்தொராம் நூற்றாண்டிலாவது இந்த மானிடசமுதாயம் பெண்களையும் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் பெண்களால் ஆங்காங்கே கருத்துகளும் ஆவணங்களும் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் எதிர்கொள்ளவே செய்கிறார்கள். இவர்களிடம் செல்வாக்கு செலுத்துவது நடைமுறையிலுள்ள அறியாமையும் ஆணாதிக்க சித்தாந்தமும் என்றே சொல்லலாம். பெண் உடல் என்பது ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் அற்புதமான மனிதி என்றால் பொருத்தமாக இருக்கும். வெளித்தோற்றத்தை மட்டும் கருத்தில் எடுத்து அவளுக்கென்ன நல்லாத்தானே இருக்கிறாள் என ஆண்களுடன் சில பெண்களும் கடந்தே செல்கிறார்கள். என்னைக் கேட்டால் இந்த சமூகத்தில் சரிபாதியான பெண்களையும், அவர்களது மாதவிடாய் போன்ற பிரச்சனைகளையும புரிந்து கொள்ளாது எந்த மாற்றமும், சமூக விடுதலையும் கனவில் கூட எட்ட முடியாத ஒன்றாகவே இருக்கும். 


 மாதவிடாய் என்பது தனியே பெண்களது பிரச்சனையா? என பரிசீலித்துப் பார்த்ததால், பதில் இல்லையென்றே சொல்லலாம். ஒரு மானிட சமூகம் மறுஉற்பத்தி செய்யப்படுவது பெண்களில் நடைபெறும் மறுஉற்பத்தி செயற்பாட்டால் என்பது யாவரும் அறிந்ததே. மறுவார்த்தையில் கூறினால் பெண்கள் இல்லையென்றால் சமூக மறுஉற்பத்ததி இல்லை என்றே கூறலாம். இவ்வாறு சமூக மறுஉற்பதியில் முக்கிய பங்களிப்பு செய்யும் பெண்களில் அதனோடு தொடர்புடைய உடல் உள பிரச்சனைகளை யாவருமே அதிகவனம் செலுத்தல் வேண்டும். மாதவிடாய் என்பது பெண்கள் பருவமடைந்த பின் உடலில் ஏற்படும் ஓமோன் மாற்றத்திற்கு அமைய நடைபெறும் இயற்கையான உடலியல் செயற்பாடாகும். இந்த மாற்றமானது பெண்களில் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக நடைபெறுவதால் இதனை மாதவிடாய் வட்டம் என அழைப்பர்.


மாதவிடாய் வட்டம் நிகழ்வது பெண்களில் சுரக்கும் பாலியல் ஓமோன்களின் செயற்பாட்டினால் ஆகும். இவ் ஓமோன்கள் ஈஸ்ரோஜன் புரோதெஸ்திரோஜன் என அழைக்கப்படும். பொதுவாக பெண்களில் இந்த  பருவமடைதல் நிகழ்வு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதில் தொடங்குகிறது. எனினும் சில பெண்களில் ஒன்பது வயதிலும் தொடங்கிறது. இன்னும் சில பெண்களில் பாலியல் ஓமோன்களின் சமநிலையற்ற நிலமை அல்லது ஆண் பாலியல் ஓமோன் அதிகளவில் காணப்படும் காரணத்தினால் பருவமடைதல் என்ற செயற்பாடு அற்றவராகவும் காணப்படுவர். இந்த ஓமோன்களின் சுரக்கும் தன்மை ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலமைபிற்கு ஏற்ப வேறுபடும். இவ்வேறுபாட்டிற்கு அமைய மாதவிடாய் வட்டமும் வேறுபடலாம். பொதுவாக 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் என்றபோதிலும் சில பெண்களில் முப்பத்தைந்து நாட்கள் தொடக்கம் மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை மாறுபட்ட ஒழுங்கற்ற மாதவிடாய் நிகழ்வையும் கொண்டிருக்கும். வேறு சில உடலியல் குறைபாடுகளினாலும் இவ்வாறு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம். 


மாதவிடாய் வட்டம் பற்றிய விஞ்ஞான விளக்கம்

பெண்களின் உடல் மறுஉற்பத்தியிற்கு தயார் நிலையை அடையும்போது மாதவிடாய் தொடங்குகிறது. அதாவது, சூழகம் விருத்தியடைந்து முதலில் முட்டை வெளிவரும். இம் முட்டை விந்துடன் சேர்ந்து கருக்கட்டல் நிகழ்ந்தால் முளையம் உருவாகிறது. இந்த முளையம் பதிவதற்கு ஏற்றவாறு கருப்பை சுவர் தயாராவதும் பின்னர் கருக்கட்டல் நிகழாமையினால் அவை உடைந்து இரத்தமும், இழையங்களும் வெளியேறுவதே மாதவிடாய் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வெளியேறும் இரத்தம் சாதாரண வெட்டுக்காயம் ஏற்படும்போது வெளிவரும் இரத்ததினை ஒத்ததாகவே இருக்கும். இதில் எந்தவித கிருமியோ அழுக்கோ இல்லை. ஆனால் எமது சமூகம் இதனை அசுத்தம் தீட்டு கழிவு என கற்பிதம் செய்து கொள்கிறது. உண்மையில் இந்த கருப்பைச்சுவர் முளையம் பதிவதற்கு தேவையான தளத்தை வழங்குகிறது. இவ்வாறு முளையம் வளர்வதற்கு உதவும் கருப்பைச்சுவரை கழிவு என கூறுவது அறியாமையின் செயற்பாடு என்றே கூறலாம்.

 

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பல விதமான உடல் உள உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள். சாதாரணமாக வயிற்றுவலி, உடல் உளைவு, மனச்சோர்வு, தலைசுற்றல் வாந்தி எரிச்சல் போன்ற குணங்குறிகளுடன் நான்கு தொடக்கம் ஆறு நாட்கள் வரை இரத்தப்போக்கும் காணப்படும். ஆனாலும் பெண்களது உடல் அமைப்பானது ஆளுக்கு ஆள் வேறுபாடுகளையும் அசாதாரண நிலமைகளையும் கொண்டே இருப்பதால் இந்த மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் உபாதையானது 

* கடுமையான வயிற்றுவலி

* அதிக இரத்தப்போக்கு

* நீண்ட நாள் இரத்தப்போக்கு

என வேறுபாடுகளையும் கொண்டிருப்பதை நாம் காணலாம். அத்துடன் ஒழுங்கற்ற மாதவிடாய் நிகழ்வையும் காணலாம். இவ்வாறு ஒழுங்கற்ற மாதவிடாய்யிற்கு சில காரணிகள் அவர்களின் உடலியல் செயற்பாட்டில் செல்வாக்கு செலுத்துகிறது.

ஒழுங்கற்ற மாதவிடாய்யிற்காண காரணங்கள்.......

    குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரை 

    வேறு மருத்துவ காரணங்களுக்காக எடுக்கும் மருந்துகள்

    அளவுக்கதிகமான உடற்பயிற்சி

    தைரோயிட் குறைபாடு

    மன அழுத்தம் (ஸ்ரெஸ்)

    கருப்பைச் சுவரில் கட்டி

    என்டோமெற்ரிசிஸ் (ரிசுக்களின் அதீத வளர்ச்சி கருப்பையின் வெளிப்பக்கத்தில்) 

    பொலிசிரிக் ஓவரி சின்ரம் 

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தல்

    லூப் போன்ற கருத்தடை சாதனங்களின் பாவணை

இவ்வாறு பல காரணங்களினால் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பல சிரமங்களையும் இன்னல்களையும் முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொதுவாக மாதவிடாயின்போது ஐம்பது மி.லி வரையிலேயே இரத்தப்போக்கு இருக்கும். மிக அதிக இரத்தப் போக்கை கொண்டிருக்கும் பெண்களில் ரத்தச்சோகையை உண்டாகிறது. அத்துடன் நீண்ட நாட்கள் இரத்தப்போக்கை கொண்டிருந்தால் தொற்றுதல் ஏற்படுவதும் சாத்தியமாகிறது. பெண்களில் மாதவிடாய் வருவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் அவர்களின் உடலில் ஏற்படும் ஓமோன் மாற்றங்களினால் பிரி மென்சரல் ஸ்ரெஸ் என்ற பாதிப்பு நிலையும் ஏற்படுகிறது. இதனால் இவர்கள் மனநிலை மாற்றத்திற்கு உள்ளாகி எரிச்சல், மனச்சோர்வு, மனஅழுத்தம், அதிக பசி என பல வேறுபாடுகளையும் கொண்டிருப்பர். இக் காலங்களில் வீடுகளில் பெண்களின் அருகில் இருக்கும் உறவினர்களான துணைவர், சகோதரர்கள் போன்ற ஆண்கள் அவர்களை விளங்கிக் கொள்ள முயல்வதில்லை. வேறு சில ஆண்கள் கேலி செய்வதினையும் காணலாம். இப் பெண்களுக்கு அருகில் இருக்கும் ஆண்கள் அவர்களை புரிந்து கொண்டு உதவுவார்கள் எனின் இவர்கள் இலகுவில் கடந்து செல்லக் கூடியதாக இருக்கும்.  இவ்வாறு பெண்களில் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உபாதைகள் அவர்களை மரணத்தின் விளிம்புவரை எடுத்துச் செல்கிறது என்றால் மிகையாகாது. இத்தனை துன்பம் மிகுந்த மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு அவசியமானது. ஆகையினால் அந் நாட்களில் தேவைப்படின் விடுமுறை வழங்குவது பற்றியும்  கவனத்தை செலுத்துவது இன்றியமையாததாகும். இதனை சில நாடுகளில் அமுல்படுத்தியும்  உள்ளார்கள். 

   

முதல் மாதவிடாயும் அதனை கொண்டாடுதலும்


பெண்கள் பருவநிலை எய்வதினை அதாவது முதல் முதலில் மாதவிடாய் தொடங்கும்போது நம் தமிழ் சமூகம் பூப்புனித நீராட்டு விழா என கொண்டாடுகிறார்கள். உண்மையில் இவ்வாறான உடலியல் மாற்றம் ஆண் பெண் இருபாலரிடமும் ஏற்படும் இயற்கையான செயற்பாடு ஆகும். ஆனால் பெண்களுக்கு மட்டும் இதனை கொண்டாடுவது என்பது அவர்களை விளம்பரம் செய்வதுபோல் உள்ளது. முற்காலத்தில் தமிழ் சமூகத்தில் சராசரி திருமண வயதானது 13 ஆகவே இருந்துள்ளது. இதனால் அக்காலத்தில் உறவினருக்கும் மற்றயவர்களுக்கும் திருமணத்திற்கு பெண் தயார் என்பதை தெரிவிக்கும் நோக்கிலேயே இவ்விழா கொண்டாடப்பட்டது. அத்துடன் பெண்கள் கல்வி தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் இருந்ததால் அவர்களது நிறைவு திருமணபந்தத்தில் ஈடுபட்டு குழந்தைகளை பெற்றுக் கொடுப்பதே எனவும் கருதப்பட்டது. ஆனால் இன்று இவ்வகையான கொண்டாட்டம் காலத்திற்கு ஒவ்வாததாக இருந்தபோதிலும் இவ்வாறு பருவமடைந்த பெண்களுக்கு உடை நகை அழகுப்பூச்சுக்கள் என அலங்காரம் செய்து உறவினரும் அயலவர்களும் அன்பளிப்புகளை வழங்குவதனால் பெண்கள் தம்மையறியாமலே இக் கொண்டாட்டத்தை விரும்பும் வகையில் அமைந்துவிடுகிறது. தமிழ் சமூகத்தில் பண்பாடு என்ற பெயரில் கொண்டாடப்படும் இப் புப்புனித நீராட்டுவிழா அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதாக கருதி போலிதனங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது.


நமது சமூக அமைப்பானது ஆணாதிக்க கட்டமைப்பை கொண்டதாகும்.இங்கு ஆண்களே அதிகாரம் மிக்கவர்களாக காணப்படுவர். இவ்வாறு அதிகாரமிக்க ஆண்களால் உருவாக்கப்பட்டு நடைமுறையில் பாதுகாக்கப்படும் கருத்துக்களை ஆணாதிக்க சித்தாந்தம் என அழைப்பர். இவர்கள் பெண்கள் ஆண்களுக்காக படைக்கப்பட்டவர்கள் என்ற மத நம்பிக்கையை கொண்டிருப்பவர்கள். இதனால் பெண்களை இரண்டாவது நிலைக்கு தள்ளுவதுடன்,அவர்களின் மாதவிடாய் போன்ற உடலியற் செயற்பாடுகளை அருவெறுப்புகொண்டு நோக்குகிறார்கள். இதன் வெளிப்பாடாக இதனை தீட்டு, அழுக்கு அசுத்தம் என கூறி அக் காலங்களில் அசுத்தமானவர்கள் என ஒதுக்கி வைக்கிறார்கள்.  இந்தவகையான ஆணாதிக்க சித்தாந்தங்களை உள்வாங்கிய எமது முன்னோர்கள் மூடத்தனமாக சில செயல்களையும் செய்தேயுள்ளார்கள். 

மாதவிடாயின்போது பெண்கள் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பின்வருமாறு அமைந்திருந்தது. 

 

* தனியறையில் தங்க வைத்தல். நேபாலம் போன்ற நாடுகளில் மாட்டுத்தொழுவம் அல்லது பாதுகாப்பற்ற சிறிய கொட்டில்களில் ஒதுக்கி வைத்தல்.

* சமையலறை,சுவாமியறைகளில் அனுமதிப்பதில்லை.

* கோயிலுக்கு செல்வது குற்றம் என தடுத்து வைத்தல்.

* நல்ல ஆடைகள் அணிவது, மகிழ்ச்சியான சடங்குகளில் பங்கு கொள்வதற்கு தடை    விதித்தல்.

* குளித்தல் உடல்நலத்தை பாதிக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல்.

* உடலுறவு தவிர்க்கப்பட வேண்டும் என வலியுருத்தல்.

* கிணற்றில் தண்ணீர் எடுத்தல் குற்றமாக கருதல்.


இத்தகைய ஐதீக நம்பிக்கையினால்  மூன்றாம் அல்லது நான்காம் நாள் தலைக்கு குளிப்பது, பாவித்த சகல உடைகள், படுக்கை என எல்லாவற்றையும் கழுவுதல், நடந்த வீட்டு முற்றங்களை கூட கூட்டி மஞ்சள் தண்ணீர் தெளித்தல், தங்கிய அறையை கழுவுதல் போன்ற செயற்பாட்டின் மூலம் சுத்தப்படுத்தப் படுவதாக நம்புகிறார்கள். இவ்வாறு

 பெண்கள் பலவகையான கட்டுப்பாடுகளை விஞ்ஞானத்திற்கும், அறிவிற்கும் பொருந்தாத வகையில் அனுபவித்தார்கள். இவை இன்றுவரை எமது தாயகத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளது. முன்பு மாதவிடாய் காலங்களில் குளித்தல் கூடாது என்று கூறியவர்களே பின்பு குளித்துவிட்டு வீட்டினுள் செல்லலாம் என்றும், சுவாமியறை, சமையலறையும் கூட பாவனையிற்கு வரும் நிலமையையும் காணமுடிகிறது. ஒரு காலத்தில் அனுசரிக்கப்பட்டவை காலத்தின் தேவையை ஒட்டி மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதே நடைமுறை நிதர்சனம் ஆகும். எனினும் சில பின்தங்கிய  நாடுகளில் மாதவிடாய் காலத்தில்  பெண்களை மாட்டுத்தொழுவம் அல்லது சிறிய பாதுகாப்பற்ற கொட்டில்களில் தங்க வைப்பதால் பெண்கள் பல இன்னல்களை அனுபவித்தார்கள். நோய் தொற்றுதலுக்கு ஆளானார்கள். கொடிய மிருகங்களாலும் நச்சு ஊர்வனவாகிய பாம்பு போன்றனவாலும் மரணமடையும் நிலையும் காணப்பட்டது. அதுமட்டுமல்லாது பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகும் நிலமையும் காணப்பட்டது.  


கோயில்களில் பெண் தெய்வங்களும் உண்டு. அவர்களுக்கும் மாதவிடாய் பொருந்தும்தானே. இந்தியாவில் மாதவிடாய் காலங்களில் விதிவிலக்காய் சில கோயில்களினுள் பெண்களை அனுமதிப்பதையும் காணலாம். மற்றும் சில சமயத்தவர்கள் அவர்களது கோயில்களினுள் செல்வதையும் காணலாம். உண்மையில் மாதவிடாய், தீட்டு அசிங்கம் குற்றம் அழுக்கு எனக் கூறுவது எல்லாம் சித்தாந்தம் பெண்களை கீழ்நிலை படுத்துவதற்கு திட்டமிட்டு உருவாக்கிய கருத்துக்களே என்பது ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் விளங்கிக் கொள்ளலாம். இலங்கையில் யுத்தம் நடந்த காலங்களில் செல் தாக்குதல்களுக்கு பாதுகாப்புவேண்டி மக்கள் (பெண்கள், ஆண்கள்) அனைவரும் பல மாதங்களாய் கோயில்களில் தஞ்சம் அடைந்திருந்தமை நாம் யாவரும் அறிந்த விடயமாகும். அங்கு தங்கியிருந்த பெண்கள் மாதவிடாய் காலங்களை அங்குதானே களித்தார்கள். இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் இலங்கைப் போன்று எந்த கட்டுப்பாடுகளையும் அனுசரிப்பதில்லை.  இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் படித்த மட்டங்களிலும் நகர்புறங்களிலும் இந்த கட்டுப்பாடுகள் தளர்ந்த தன்னையை கொண்டுள்ளது. அதாவது இன்று பெண்கள் கல்வி, தொழில் என ஓரளவு முன்னேறி இருப்பதால் இந்தக் கட்டுப்பாடுகள் சில (குளித்தல், சமையலறை செல்லல், வெளியில் செல்லுதல்) தளர்ந்த நிலையிலேயே உள்ளபோதிலும் பின்தங்கிய பகுதிகளில் குறிப்பாக கிராமப்புரங்களில் மிக அதிகளலில் பின்பற்றப்பட்டே வருகிறது. இவ்வாறான ஐதீகங்களை பல பெண்களும் உள்வாங்கி இருப்பதுடன் தம்மைதாமே பெண்வெறுப்பு தன்மையை கொண்டிருப்பதனையும் காணமுடிகிறது. இது பெண்களை உளவியல் ரீதியாகவும் பாதிப்பிற்கு உள்ளாக்கிறது. ஆதலால் சித்தாந்தத்தினால் கட்டமைக்கப்பட்ட ஐதீகம் என்பது வெறும் நம்பிக்கையே. உண்மைத்தன்மை அற்ற விஞ்ஞான அறிவிற்கு முரணானதே. 


பக்குவமற்ற வயதில் மாதவிடாய்


முன்னய காலங்களில் பெண்கள் பருவமடைதல் செயற்பாடு பதின்மூன்று அல்லது பதின்நான்கு வயதிலேயே தொடங்கியது. இன்று ஆச்சரியப்படும் வகையில் எட்டு, ஒன்பது வயதினில் பெண்கள் பருவமடைவதை காணலாம். இதற்கு ஓமோன் கொடுத்து வளர்த்த விலங்குகளின் இறைச்சிகள் பால் மற்றும் சில உணவுவகைகளை சேர்த்து கொள்வதினையே காரணமாக கூறுகிறார்கள். இங்கு எட்டு வயதில் அந்த பெண்கள் பக்குவமற்ற குழந்தைத் தன்மையுடனேயே இருப்பர். இவ்வாறான குழந்தைகளுக்கு இனவிருத்தி மாதவிடாய் பற்றிய தெளிவு இருக்காது. தென்இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்குழந்தைக்கு முதல் மாதவிடாய் வருவதற்கு முன்பு மாதவிடாய் பற்றிய அறிவு இல்லை என ஒரு ஆய்வு கூறுகிறது. இவ்வாறு தம்மை பாதுகாப்பது பற்றி அதாவது மாதவிடாய் பாவனைப் பொருட்களை சுகார முறைப்படி பயன்படுத்துவது பற்றிய விளக்கம் அற்றவராக இருப்பர். இவ்வாறான புரிதல்நிலை இல்லாத குழந்தைகளை அழுக்கு, தீட்டு, குற்றம் என்று ஒதுக்கி வைப்பது மிகக் கொடிய அடக்குமுறையாகவே இருக்கும்.


 மாதவிடாய் நின்றுபோவது பற்றி.......


மறுஉற்பத்தி செயற்பாடு முடிவிற்கு வரும்போது ஓமோன் சுரப்புகளின் (ஈஸ்ரோசன்,புரோதெஸ்ரோன்) தொழிற்பாடு குறைவடைந்து செல்லும். இதனால் இனப்பெருக்க பெண்களில் உடலியல் செயற்பாடு நிறுத்தப்படும். இதனை மொனொபஸ் என அழைப்பர். இது பெண்களில் மிகப் பெரிய ஓமோன் சமநிலை பாதிப்பை உருவாக்கும். இதனால் இரவில் இவர்கள் நித்திரை கொள்ள முடியாமல் போவதுடன், உடல் சூடாக உணர்வதுடன் (ஹொட் பிலாஸ்)அதிக வியர்வையும் வெளியேறும். அத்துடன் மன அழுத்தத்திற்கும் உள்ளாகுவார்கள். மாதவிடாய் ஆரம்பத்தில் ஒழுங்கற்று இருப்பதுடன், காலப்போக்கில் படிப்படியாக நின்றுவிடும். மாதவிடாய் நின்றுவிடுவதால் ஒடுக்குதல் முறையிற்கு விடுதலை கிடைத்தாலும், சமநிலையில் இருந்த உடற்தொழிற்பாடு சமநிலை குலைவதால் வேறு பலபிரச்சனைகளும் ஏற்படுகிறது. முக்கியமாக பாலியல் உணர்வு வேட்கை குறைந்து போகும். இதனால் குடும்பங்களில் இக் காலத்தின்பின் பெண்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். பெண்களால் பாலியலில் பூரண திருப்தி அடைய முடியாமை மிகப் பெரிய இழப்பாகும். இதன்போது பெண்கள் குடும்பம் என்ற நிறுவத்தினுள் வந்த பின்பு செக்குமாடுகளாய் உழைத்தவர்கள் தம் துணைவர்கள் வேறு பெண்களை நாடுவார்களோ என்றும் பயப்படும் நிலமையினை உருவாக்கிவிடும். இந்த மாதவிடாய் நிற்றல் குறைந்த வயதிலும் ஏற்படலாம். எனவே இவ்வாறான கஸ்டங்களையும், இன்னல்களையும் கொடுக்கும் மாதவிடாய் எனும் உடற் செயற்பாட்டை ஆண் பெண் இரு பாலரும் குறிப்பாக ஆண்கள் விஞ்ஞான ரீதியான விளக்கங்களை பெறுவது மிகவும் அவசியமானது. ஆணாதிக்க சிந்தனை இவற்றை அறிந்துகொள்வதில் அலட்சியப்படுத்தும். ஆனால் பெண்களாக உங்கள் பக்கங்களில் இருப்பரை சரிவர புரிந்து கொள்ள வேண்டுமாயின் ஒவ்வொரு ஆண்களும் மாதவிடாய் பற்றிய தெளிந்த அறிவினை பெறுதல் இன்றியமையாத கடமையாகும்.


மாதவிடாய் காலங்களில் பெண்களின் பாவனைக்கு


-மாதவிடாய் என்ற உடற் செயற்பாட்டில் கருப்பைச்சுவர் உடைந்து வெளியேறும் குருதியையும் இழையங்களையும் உறிஞ்சிக் கொள்வதற்கு பொதுவாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் துணியையே பாவித்தார்கள். பின்தங்கிய கிராமங்களில் மரத்துள் மண் சாம்பல் போன்ற பாவனைப் பொருட்களும் பயன்பாட்டில் உள்ளது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியினால் சுகாதார பாவனைப் பொருட்கள் நடைமுறையிற்கு வந்துள்ளது.                                                      

    டிஸ்போசபில் பாட்

    ரீயுசபில் பாட்(துணி)

    அன்டவெயர்  (பல அடுக்கு)

    மென்சரல் கப்

    ரம்பொன் (பஞ்சு) 

இவ்வாறு முன்னேறியிருக்கும் வேளையில் உலகலாவிய ரீதியில் சிலநாடுகள் பின் தங்கிய நிலையில் உள்ளன. இங்கு பருவமடைந்த பெண்கள் மாதவிடாய் காலங்களில் இவ்வகையான சுகாதார  பாவனைப் பொருட்களை வாங்குவதற்கும், உபயோகிப்பதற்கும் வசதி அற்றவர்களாய் இருக்கிறார்கள். இதனை ‘மாதவிடாய் வறுமை’ (menstrual povetry) என அழைப்பர். சில நாடுகளில் பிள்ளைகள் மாதவிடாய் காலத்தில் பாடசாலைக்கு செல்வதில்லை. ஏனெனில் மலசலகூடம், தண்ணீர் அகற்றுவதற்கான வசதி என அடிப்படை வசதி அற்ற நிலையில் வாழ்க்கையை கொண்டிருப்பதே ஆகும். பின்தங்கிய நாடுகளில் மட்டுமல்ல வளர்முக நாடுகளிலும் வறுமை நிலையில் இருப்பவர்கள் இந்த மாதவிடாய் வறுமையினை கொண்டுள்ளார்கள். வளர்முக நாடாகிய இங்லாந்தில் பத்தில் ஒரு இளம் பெண்கள் மாதவிடாய்க்கான சுகாதார பாவனைப் பொருட்களை பெறுவதில் சிரமங்கள் கொண்டுள்ளதாக ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது. இன்று உலகலாவிய ரீதியில் இலட்சகணக்கான பெண்கள் சிறைசாலைகளில் உள்ளார்கள். இவர்கள் மாதவிடாய் பாவனைப் பொருட்கள் மலசலகூட தண்ணீர் வசதிகள் அற்ற நிலையிலேலே இருப்பது மனித உரிமை மீறல் செயற்பாடாக கூறப்படுகிறது. இதேபோல் அகதிமுகாம் தடுப்புமுகாம் போன்றவற்றையும் குறிப்பிடலாம். இவ்வாறு மாதவிடாய் வறுமை நிலையிற்கு உட்பட்டிருக்கும் பெண்களுக்கு இலவசமாக பாட் கொடுப்பதற்கான வசதிகளை உருவாக்குதல் வேண்டும். உணவு வங்கி மூலம் வழங்குவதும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். உலகில் முதல் முதலில் இலவசமாக சுகாதார மாதவிடாய் பாவனைப் பொருட்களை பாடசாலையில் வழங்கியது ஸ்கொட்லாந்து ஆகும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் குறிப்பிட்ட வீதத்தினரே சுகாதார பாவனைப் பொருட்கள் வாங்கும் வசதிகளை கொண்டுள்ளார்கள். மற்றயவர்கள் பழைய துணியையே பாவிக்கிறார்கள். துணியை பாவித்துக் கொண்டு பாடசாலைக்கு செல்வது மிகவும் சிரமமானது. சில சமயங்களில் உராய்வு அதிகரித்து தோல் உரிந்து சிவந்தே போய்விடும். இன்னும் சில பின்தங்கிய பகுதிகளில் மரத்ததுள் மண் சாம்பல் போன்ற பாதுகாப்பற்ற பாவனைப் பொருட்கள் பாவனையில் உள்ளது. இவ்வாறான பாதுகாப்பற்ற பாவனைப் பொருடட்களால் பெண்களில் சிறுநீரக மற்றும் இனப்பெருக்க பகுதிகளில் தொற்றுதல் ஏற்படுவது சாத்தியமாக உள்ளது. பாடசாலை செல்லும் பருவமடைந்த பெண்களுக்கு அவர்களுக்கான மாதவிடாய் பாவனைப் பொருட்கள் கிடைப்பதற்கான வசதிகளை செய்து கொடுத்தல் இன்றியமையாத கடமையாகும்.  


 இவ்வாறு பெண்கள் மாதவிடாய் காலங்களில் முகங் கொடுக்கும் கஸ்டங்களை கருத்தில் கொண்டு இந்தியாவில் ஒரு ஆண் {அருணாச்சலம் முருகானந்தம்} குறைந்த விலையில் பாட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் அடைந்தார். அவரின் மனிதாபிமான செயலை நாம் நன்றியுடன் பாராட்டியே தீரவேண்டும். ஒரு ஆண், மாதவிடாயின் போது பெண்கள் முகங்கொடுக்கும் கஸ்டங்கள் பற்றி பேசுவது அசிங்கம், வெட்கம் எனறெல்லாம் கற்பிதம் கொள்ளும் பிற்போக்கு மனிதர்கள் வாழும் எமது சமூகத்தில் மாற்றங்களை வேண்டி இவர்போல் முற்போக்கு சிந்தனையாலரும் இருக்கவே செய்கிறார்கள். இதனை அண்மையில் வெளிவந்த பாட் மான் எனும் உண்மைக்கதை அக்குவேறு ஆணிவேறாக மிகத்துள்ளியமாக எடுத்துக் கூறுகிறது. ஒரு ஆண் நமது சமூக அமைப்பில் தனிமனிதன் அல்ல. அவரைச்சுற்றி அம்மாவாகவும், சகோதரியாகவும், துணைவியாகவும், மகளாகவும் என பெண்கள் இருக்கிறார்கள். இந்த பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான உடலியல் மாற்றங்களையும், துன்பங்களையும் விளங்கிக் கொள்ளாமல் அவர்களுள் ஒருவராக வாழ்தல் என்பது மிக வேடிக்கையான, எள்ளி நகையாடக் கூடிய செயல் என்பதே உண்மையாகும். இன்றும் கடைகளில் மாதவிடாய்கான பாட் வேண்டப்போனால் அதனை சுற்றிக் கொடுப்பதைக் காணலாம். ஒருநாட்டில் ஆடம்பர பொருட்களுக்கே வரிவிதிதல் பொருத்தமானது. ஆனால் பல நாடுகளில் இன்றுவரை பெண்கள் மாதவிடாய் காலங்களில் பாவிக்கும் பாட் போன்ற அடிப்படையும் அத்தியாவசியமான சுகாதார பாவனைப் பொருட்களுக்கு வரிவிதிப்பதை எவ்வாறு பார்ப்பது? உண்மையில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு எம்மிடையே இல்லை என்பதனையே காட்டுகிறது.


  முடிவாக...

உலகலாவிய சுகாதார மாதவிடாய் தினம் வைகாசி 28  கொண்டாடப்படுகிறது. மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான உடலியற் செயற்பாடு. அது உண்மையில் மதிக்கப்பட வேண்டிய அம்சமே. ஒரு பெண் பருவமடைந்து பின்னர் மாதவிடாய் நிற்கும் காலம் வரை கிட்டத்தட்ட முற்பது முற்பத்தைந்து வருடங்கள் வரை அவர்களது உடலானது ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உட்படுகிறது. இந்த இயற்கையான உடலியல் மாற்றத்தையும் உடல் உபாதைகளையும் கவனத்தில் கொண்டு அரசு மற்றும் சமூகநிறுவனங்கள்  உரிய நடவடிக்கைகள் எடுத்தல் மிக இன்றியமையாத கடமையாகும். முதலில் ஆணாதிக்க சமூக சித்தாந்த மறுஉற்பத்தியினால் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள மாதவிலக்கு என்பது அசிங்கம்,அருவெறுப்பு, தீட்டு, குற்றம், அழுக்கு போன்ற தவறான புரிந்துணர்வை களையும் பொருட்டும் எதிர்கால சந்ததியினருக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வையும் அதற்கான அறிவை வழங்கும் வகையிலும் செயல்திட்டங்களை மேற்கொள்ளுதல் வேண்டும். பாடசாலைகளில் பாலியல் பாடத்திட்டத்தினை கட்டாய கற்கைநெறியாக மேற்கொண்டு மனித உடலியல் செயற்பாடுகளையும் குறிப்பாக பெண்களின் மறுஉற்பத்தி மாதவிடாய் வட்டம் போன்ற விடயங்கள் பற்றிய அறிவையும் தொடர்சியான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளுதல்  இன்றியமையாததாகும். குடும்பம் குழந்தைகள் முதல் இசைவாக்கத்திற்கு உள்ளாகும் இடமாக இருப்பதால் மாதவிடாய் பற்றி கேள்விகள் கேட்கும்போது இரகசியம், பேசப்படாத விடயம் என மறைக்காமல் அவர்களுக்கு விளங்கும் வகையில் பதில் கூறுதல் வேண்டும். இரண்டாவதாக பெண்களுக்கான மாதவிடாய் பாவனைப் பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்வது அவர்களது அடிப்படை மனிதஉரிமையாகும். ஆதலால் பாடசாலைகள், மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் வைத்தியசாலைகள் சிறைச்சாலைகள் அகதிமுகாம்கள் போன்ற இடங்களில் சுகாதார பாட் கட்டாயமாக இலவசமாக வழங்குவதுடன் அவற்றை மாற்றுவதற்கான கழிவறை மற்றும் தண்ணீர் வசதிகளையும் வழங்குதல் வேண்டும். முக்கியமாக மாதவிடாய் வறுமை உள்ள பின்தங்கிய நாடுகளில் இந்த வசதிகளை அளிப்பது மிக அவசியமானது. மூன்றாவதாக சில பின்தங்கிய நாடுகளில் மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிமைப்படுத்தி பாதுகாப்பற்ற இடங்களில் அடைத்து வைப்பதினால் அவர்களமது உயிருக்கே உத்தரவாதம் அற்ற நிலையும் காணப்படுகிறது. இவ்வாறான இடங்களில் கடுமையான மாற்று நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் பெண்களின் மனித உரிமைகளை பாதுகாத்தல் வேண்டும். நான்காவதாக உலகலாவிய நாடுகளில் இந்த பெண்களின் மிக அத்தியாவசியமான மாதவிடாய் பாவனைப் பொருட்களுக்கு வரி வழங்குவதை உடனடியாக நிறுத்துதல் வேண்டும். டென்மார்க் சுவீடன் போன்ற நாடுகளில் 25 வீதம் மாதவிடாய் பாவனைப் பொருட்களுக்கு வரி செலுத்தப்படுகிறது. பெண்களுடைய முன்னேற்றத்திற்காக செயற்படுவபர்கள் இவை குறித்து தமது எதிர்ப்பையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தல் வேண்டும். கனடா கென்யா உகண்டா போன்ற நாடுகளில் இந்த வரி அகற்றப்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகளில் வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் பின்தங்கிய வறிய நாடுகள் பலவற்றில் வரி செலுத்தப்படும் நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த வரிவிலக்கல் உரிமையை பெறுவதற்கு பெண்கள் தொடர்ச்சியான வலியுறுத்தல் மூலமே பெறக்கூடியதாகும். அவுஸ்ரேலியாவில் 18 வருட பிரச்சாரத்தின் பின்னர் 10 வீதமாக குறைக்கப்பட்டமையை குறிப்பிடலாம். ஐந்தாவதாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனுபவிக்கும் உபாதைககள் காரணமாக அக்காலங்களில் அவர்களுகக்கான விடுமுறை வசதிகளை செய்து கொடுப்பதும் அவசியமானதாகும். யப்பானில் வேலை செய்யும் பெண்களுக்கு 1947 ல் இரண்டாம் உலக யுத்தத்தின் பின் தொழிலாளர் தர சட்டத்தின் வாயிலாக மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட்டது. ரசியா இந்தோனேசியா தைவான் சவுத்கொரியா சிம்பாவா போன்ற நாடுகளிலும் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பல நாடுகளில் இந்த விடுமுறை குறித்து பேச்சே தொடங்கவில்லை. அந்நாடுகளில் பெண்கள் துன்பம் நிறைந்த மாதவிடாய் காலத்தினையே கடந்து கொண்டுருக்கிறார்கள். ஆகவே மாதவிடாய்க்கால துன்பங்களை போக்குவதில் மேற்கூறியவாறு விஞ்ஞான ரீதியான கருத்து பலம் பெறும் வகையில் அதனை மீளவலியுருத்தல் வரி நீக்கல் விடுமுறை வழங்குதல் சித்தாந்தம் கட்டமைத்த ஐதீகங்களை கேள்விக்கு உட்படுத்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துதல் மிக மிக அவசியமானதாகும். இறுதியாக சமூகத்தின் அரைபாதியான பெண்களில் பாகுபாட்டின் அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் பெண்ஒடுக்கு முறை தீராது எந்த சமூக மாற்றமும் என்றுமே சாத்தியமில்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்